×

ஐஎப்எஸ் நிதி நிறுவனம் ₹6 ஆயிரம் கோடி மோசடி வழக்குஐஏஎஸ் அதிகாரிகள் குடியிருப்பில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளி கைது: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை, ஏப்.6: ஐஎப்எஸ் நிதி நிறுவனம் ரூ.6 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஹரிகரன் என்பவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு ஐஎப்எஸ் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் மாநிலம் முழுவதும் கிளைகளை தொடங்கி நடத்தி வந்தது. 10 முதல் 25 சதவீதம் வட்டி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி முதலீடுகளைப் பெற்றது. அதில் அதிகாரிகள், தொழில் அதிபர்களை குறி வைத்து அவர்களிடம் முதலில் முதலீடுகளைப் பெற்றது. அவர்களுக்கு ஆரம்பத்தில் அதிக வட்டி கொடுத்தனர். பின்னர் வட்டி கொடுப்பதை நிறுத்தி விட்டனர். இது குறித்து பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

கூடுதல் டிஜிபி வினித் தேவ் வாங்கடே, ஐஜி ஆசியம்மாள் ஆகியோரது தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் ரூ.6 ஆயிரம் கோடி வரை முதலீடுகளை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில், முக்கிய குற்றவாளிகளான ஜெகநாதன், குப்புராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நிதி நிறுவனத்துக்குச் சொந்தமான 21 இடங்களில் சோதனை நடத்தி ஒரு கோடி ரூபாய், 247 ஆவணங்கள், 40 பவுன் நகை, 15 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தநிலையில், இந்த நிதி நிறுவன மோசடி குறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் திடீரென்று விசாரணையை தொடங்கியுள்ளனர். அதன் ஒரு கட்டமாக இயக்குநர்களின் வீடுகளில் கடந்த இரு நாட்களாக சோதனை நடத்தி வந்தனர். மேலும், இந்த நிதி நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஹரிகரன் என்பவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். அவர், சென்னை கோயம்பேட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான குடியிருப்பில் ஜி பிளாக்கில் வாடகைக்கு வசித்து வருவது தெரிந்தது. இந்த வீடு, ஐஎப்எஸ் அதிகாரி ஒருவரின் வீடு என்று கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இந்த மோசடி நிறுவனத்தில் இயக்குநராக சேர்ந்த பிறகு தனியார் நிறுவன வேலையை ராஜினாமா செய்து விட்டு, முழுமையாக இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஐஎப்எஸ் நிதி நிறுவனம் ₹6 ஆயிரம் கோடி மோசடி வழக்கு
ஐஏஎஸ் அதிகாரிகள் குடியிருப்பில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளி கைது: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
appeared first on Dinakaran.

Tags : IFS Financial Institution ,Chennai ,Harikaran ,IFS Financial Company ,
× RELATED சேந்தமங்கலம் நீதிபதி இடமாற்றம்